×

ஊருக்கென்று வாழும் நெஞ்சம்…

குறளின் குரல்-122(ஒப்புரவு அறிதல்: அதிகாரம் 22)ஒப்புரவு அறிதல் என்பது திருக்குறள் அறத்துப் பாலில் இடம்பெற்றிருக்கும் இருபத்திரண்டாம் அதிகாரம். ஒருவருக்கொருவர் உதவி செய்து உலகில் வாழும் பண்பு நலனைப் பற்றி இந்த அதிகாரத்தில் பத்துக் குறட்பாக்களில் விரிவாக உரைக்கிறார் வள்ளுவப் பெருந்தகை. இவ்விதம் வாழவேண்டும் என்பதை ஒருவன் தானே அறிந்து உணர வேண்டும் என்பதால் ஒப்புரவு அறிதல்’ என்று இந்த அதிகாரத்திற்குப் பெயர் சூட்டியுள்ளார்.பிறருக்கு உதவிடும் இனிய பண்பே ஒப்புரவு என்ற சொல்லால் சுட்டப்படுகிறது. மன்பதைக்கு ஒத்த நிலையில் கொடை செய்தல்’ என ஒப்புரவு என்ற சொல்லுக்கு விளக்கம் தருகிறார் அறிஞர் வ.சுப. மாணிக்கம். ஒப்புரவறிதல் உலக நடையை அறிந்து செய்தல். உலக நடை அறிதலாவது உலகம் நடைபெறுவது மக்கள் பலர்கூடி ஒருவர்க்கொருவர் உதவி வாழ்தலால்தான் என்பதை அறிதல்’ என இச்சொல்லின் பொருளை விளக்குகிறார் அறிஞர் நாகை. சொ. தண்டபாணிப் பிள்ளை.பொதுமக்களுக்குச் செய்யும் பிரதிபலன் பாராத தொண்டே ஒப்புரவு எனப்படுகிறது. இரக்கப்பட்டு உதவுவது போன்றது அல்ல இது. உலகமே ஒரு குடும்பம் என்பதை உணர்ந்து உலகிற்கு உதவும் பண்பே ஒப்புரவு. தான், தன் குடும்பம் எனக் குறுகிய வட்டத்தில் வாழாமல் உலகம் முழுவதையைமே தன் குடும்பம் போல் எண்ணி, எந்தப் பலனையும் எதிர்பாராமல் செய்யும் செயல்களெல்லாம் ஒப்புரவு எனப்படும். பொதுத் தொண்டு செய்பவர்களெல்லாம் ஒப்புரவாளர்களே. பொதுத் தொண்டு செய்ய ஒருவர் செல்வம் படைத்தவராக இருக்க வேண்டும் என்பதில்லை. பொதுத் தொண்டில் தனது நேரத்தையும் ஆற்றலையும் செலவழிப்பவர் ஒப்புரவாளராகிறார். ஊதியம் எதுவும் பெறாமல் சமூகப் பணிபுரியும் தன்னார்வத் தொண்டர்களெல்லாம் ஒப்புரவாளர்களே. ஊரைத் தூய்மைப் படுத்தல், ரத்ததான முகாம், கண்மருத்துவ முகாம் போன்றவை நடத்துதல், இயற்கைச் சீற்றங்களின் போது உதவுதல், நூலகம் கட்டுதல், கல்வி நிலையங்கள் அமைத்தல், தண்ணீர்ப் பந்தல் அமைத்தல் போன்றவை எல்லாம் ஒப்புரவுப் பணிகளே.ஈகை வேறு. ஒப்புரவு வேறு. ஈகை என்பது தனிப்பட்டவரின் தேவையறிந்து அவர்க்குப் பொருளீதல். ஒப்புரவு என்பது பொதுநல நோக்குடன் செயல் படுதல். எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல் உதவுகிறவனே ஒப்புரவாளனாவான்.`கைம்மாறு வேண்டாக் கடப்பாடு மாரிமாட்டுஎன்ஆற்றும் கொல்லோ உலகு’ (குறள் எண் 211)மழை பெய்து இந்த உலகைச் செழிக்கச் செய்கிறது. அந்த மழைக்கு இந்த உலகம் பதிலுக்கு என்ன செய்து விட முடியும்? மழைபோன்ற சான்றோர்கள் கைம்மாறு கருதாமலேயே உதவி செய்கின்றனர்.கபிலர், ஒப்புரவுப் பண்பு நலனில் உயர்ந்தோங்கி வாழ்ந்த வள்ளல் பாரியை மழையோடு ஒப்பிடுகிறார். பாரி பாரி என்று பாரியை மட்டுமே கொண்டாடுகிறீர்களே? மழையும் உண்டே? அதுவும்தான் பாரியைப் போல் உலகைக் காக்கிறது. மழையையும் கொண்டாடுங்கள்’ என வஞ்சப் புகழ்ச்சி அணியாக பாரியின் ஒப்புரவுத் தன்மையைப் போற்றுகிறார்.பாரி பாரி என்று பல ஏத்திஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்பாரி ஒருவனும் அல்லன்மாரியும் உண்டு ஈண்டு உலகு புரப்பதுவே.’ (புறநானூறு 107)தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்குவேளாண்மை செய்தற் பொருட்டு.’ (குறள் எண் 212)தகுதியானவர்களுக்கு உதவி செய்வதற்காகவே பொதுநல விரும்பிகள் உழைத்துப் பொருள் சேர்க்கிறார்கள்.புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறவரிதேஒப்புரவின் நல்ல பிற. (குறள் எண் 213)பிறருக்கு உதவி செய்யும் ஒப்புரவு என்னும் உயர்ந்த குணத்தை விட உயர்வான ஒன்று இவ்வுலகிலும் இல்லை. விண்ணுலகிலும் இல்லை.ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்செத்தாருள் வைக்கப் படும்.’ (குறள் எண் 214)தம்மைப் போன்றே பிற உயிர்களையும் கருதவேண்டும். அப்படிக் கருதுபவனே உயிர்வாழ்பவன் ஆவான். மற்றவர் இறந்தவராகவே கருதப்படுவர். அவர்களை நடைப்பிணங்கள் என்றே கூறவேண்டும்.ஒப்புரவு அறிதல் என்ற அதிகாரத்தில் 215, 216, 217 ஆகிய மூன்று குறள்களும் படிப்படியாக ஒப்புரவு மனநிலையில் ஒருவன் எப்படி வளரவேண்டும் என்பதை உவமைகளால் அழகாக உணர்த்துகின்றன.ஊருணி நீர் நிறைந்தற்றே உலகவாம்பேரறி வாளன் திரு.’(குறள் எண் 215)தன்னில் வந்து சேர்ந்த நீரைக் குளமானது பொதுமக்கள் அனைவருக்கும் பாரபட்சமின்றிக் கொடுக்கிறது. அதுபோல், உலக மக்களின் நன்மையைப் பெரிதும் விரும்பும் சான்றோர் பெருமக்கள், தங்களிடம் சேர்ந்த செல்வத்தைக் கொடுப்பர். இதனினும் அடுத்த நிலைக்கு மேம்பட்டுச் செல்லும் ஒப்புரவாளனைப் பற்றி அடுத்த குறள்  பேசுகிறது.பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்நயனுடையான் கட் படின்.’ (குறள் எண் 216)ஊரின் நடுவே உள்ள பழுத்த மரம் தன்னில் ஒரு பகுதியான பழங்களைக் கொடுப்பதுபோல், ஒப்புரவாளன் தன் செல்வத்தின் ஒரு பகுதியைக் கொடுப்பான். ஒப்புரவுத் தன்மையில் மூன்றாம் நிலை ஒன்று உண்டு. மருந்து மரம் தன்னையே முழுமையாகக் கொடுத்து விடுகிறது. பெருந்தன்மையாளனிடம் செல்வம் சேர்ந்தால், எல்லாப் பாகங்களும் நோய்க்கு மருந்தாகும் மரம்போல அச்செல்வம் முழுமையாகப் பிறருக்குப் பயன் தருகிறது.ஸ்ரீமருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்பெருந்தகை யாளன்கட் படின்.’ (குறள் எண் 217)வாழை மரத்தை வீடுகளில் விரும்பி வளர்க்கிறார்கள். அந்த மரத்திற்கு நாள்தோறும் நீர்பாய்ச்சி அதைப் பாதுகாக்கிறார்கள். ஏன் தெரியுமா? வாழை மரம் நாவுக்கினிய வாழைப் பழத்தைக் கொடுக்கும். வாழைப் பூவைக் கறி சமைத்து உண்ணலாம் வாழைத் தண்டும் கூட சமையலுக்கு உதவும். வாழைத் தண்டிலிருந்து உரித்து எடுக்கப்படும் நார் பூத்தொடுக்கப் பயன்படும். வாழை மரத்தில் பயன்படாதது என்று எதுவுமில்லை. அந்த மரத்தின் எல்லாப் பகுதிகளுமே பயன்படும். அதற்குப் பல மருத்துவக் குணங்களும் உண்டு. வேப்ப மரமும் இப்படிப் பட்டதே. அதன் இலை, பட்டை, பழம், விதை அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை.வாழை மரத்தைப் போலவும் வேப்ப மரத்தைப் போலவும் ஒருவன் வாழ்வான் என்றால் அவனால் சமுதாயம் பல வகைகளில் பயன்பெறும். எல்லா உறுப்புகளாலும் பயன்தரும் மருந்து மரம் போல இல்வாழ்வான் இருத்தல் வேண்டும் என்கிறார் வள்ளுவர். தன்னில் சேர்ந்ததைக் கொடுப்பது (குளம்) , தன்னில் ஒரு பகுதியைக் கொடுப்பது (ஊரின் நடுவே உள்ள பழுத்த மரம்) , தன் செல்வம் முழுவதையுமே கொடுத்து விடுவது (மருந்து மரம்) என ஒப்புரவின் மூன்று படிநிலைகளும் இவ்விதம் வள்ளுவரால் விளக்கப்படுகின்றன.ஸ்ரீஇடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார்கடனறி காட்சி யவர்.’ (குறள் எண் 218)செய்ய வேண்டிய கடமை இன்னதென அறிந்த அறிவுடையோர் தங்களிடம் செல்வ வளம் இல்லாத காலத்திலும் உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவத் தயங்க மாட்டார்கள்.ஸ்ரீநயனுடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும்நீரசெய்யா தமைகலா வாறு.’ (குறள் எண் 219)உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவுகின்ற மனம் படைத்தவன் வறியவன் ஆவது என்பது, செய்யக்கூடிய உதவிகளைப் பிறருக்குச் செய்ய முடியாது வருந்தும்போதுதான்.ஸ்ரீஒப்புரவினால் வரும் கேடெனின் அஃதொருவன்விற்றுக்கோள் தக்க துடைத்து.’ (குறள் எண் 220)உலக மக்களின் நன்மையின் பொருட்டு ஒப்புரவுப் பணிகள் செய்வதால் பல வசதிக் குறைவுகளும் ஏன் கெடுதல்களுமே ஒருவனுக்கு நேரலாம். ஆனால் அதைக் காரணம் காட்டி ஒப்புரவு செய்வதை விட்டுவிடாதே என்கிறார் வள்ளுவர்.ஸ்ரீஉன்னை விற்றுக் கூட ஒப்புரவுப் பணிகளைச் செய். ஆனால் ஒப்புரவு செய்வதை மட்டும் நிறுத்தி விடாதே` என்கிறார். ஒப்புரவுப் பணிகளால் பயனடையும் சமுதாயத்தின் மீது அத்தனை அக்கறை வள்ளுவருக்கு. ஒருவன் தன்னைத் தானே விற்றுக் கொள்வது என்பது இழிவான செயல்தான். ஆனால் உண்மையே பேச வேண்டும் என்ற விரதத்திற்காக அரிச்சந்திரன் இடுகாட்டுக் காவலனுக்குத் தன்னையே விற்றுக் கொண்டான். தன்னை விற்றுக் கொண்டாகிலும் அடுத்தவர்க்கு உதவி செய் என்கிறது வள்ளுவம்…..ஈகை, ஒப்புரவு ஆகிய இரு பண்புகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்றாலும் ஈகையை விடச் சிறந்தது ஒப்புரவு என்கிறார் குன்றக்குடி அடிகளார்.`ஈதலில் கொடுப்பார் உண்டு. வாங்குவார் உண்டு. இருவேறு நிலை உண்டு. ஒப்புரவு நெறியில் அஃது இல்லை. ஒப்புரவு உரிமையும் கடமையும் இணைந்த நெறியாகும். கொள்வார் கொடுப்பார் என்ற நிலை ஒப்புரவு நெறியில் இல்லை. மாமுனிவர் மார்க்ஸ்இலண்டனில் தங்கியிருந்த காலத்தில் அவர் வீட்டில் பண்டத்தை வைத்துப் பூட்டும் பழக்கம் இல்லை. மேசையின் டிராயரில் பணம் இருக்கும். கார்ல் மார்க்சின் நண்பர்கள் பலர் அங்கு வருவர். அவர்களில் யாருக்காவது பணம் தேவையானால் எடுத்துக் கொண்டு போவார்கள். திரும்பக் கிடைக்கும்போது கொண்டுவந்து போடுவார்கள்.’ மகான் அரவிந்தரின் வாழ்க்கைச் சரித்திரத்தைப் படிக்கும்போது அவர் ஒப்புரவு நெறியில் உயர்ந்தோங்கி விளங்கியவர் என்பதை அறிகிறோம். அவர் தான் சம்பாதித்த பணத்தையெல்லாம் தன் இல்லக் கூடத்தில் ஒரு மேசையில் தட்டில் குவித்து வைத்திருப்பாராம். அதைப் பார்த்த நண்பர் ஒருவர் `பணத்தை எடுத்து அலமாரியில் பூட்டி வைக்கக் கூடாதா?’ என்று கேட்டாராம்.அதற்கு அரவிந்தர் ஸ்ரீநான் அப்படிச் செய்தால் என் வீடு தேடிவரும் நண்பர்களை நான் சந்தேகப் படுகிறேன் என்றல்லவா ஆகும்?’ என பதில் சொன்னாராம். கேள்வி கேட்டவர் அத்தோடு விடவில்லை. ` அது இருக்கட்டும். உண்மையிலேயே யாராவது இதில் கொஞ்சம் பணத்தை எடுத்துச் சென்றுவிட்டால் என்ன செய்வது?’ எனக் கவலை தெரிவித்தாராம். அதற்கு மகான் அரவிந்தர் `எடுத்துச் செல்லட்டுமே? தேவையிருப்பவர்கள் எடுத்துச் செலவழிக்கத் தானே பணம்?’ என்றாராம்.ஸ்ரீ அரவிந்தரின் ஒப்புரவுப் பண்பு என்பது அத்தகைய உச்சத்தில் இருந்தது. தன் மனைவி மிருணாளினிக்கு அவர் எழுதிய கடிதத்தில், தான் சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் இந்திய மக்கள் அனைவருக்கும் அப்படியே வாரிக் கொடுத்துவிடவே தன் மனம் விரும்புவதாக எழுதியிருக்கிறார். ஒப்புரவு என்ற பண்பு நலனைப் பற்றி அவ்வையாரும் ஆத்திசூடியில் கூறியுள்ளார். ஸ்ரீஒப்புரவு ஒழுகு’ என்பது அவ்வை வாசகம். ஒப்புரவு என்ற சொல்லுக்கு சமன்பாடு என்று பொருள். இருப்பவர்கள் இல்லாதவர்களுக்குக் கொடுத்து உதவுவதால் உலகில் சமன்பாடு ஏற்படுகிறது. அத்தகைய சமன்பாடு தேவை என்பதை உணர்த்தும் பண்பே ஒப்புரவு ஆகும். சமுதாய நலன் குறித்துச் செய்யப்படும் அனைத்துச் செயல்களும்  ஒப்புரவு என்பதில் அடங்கும்.ராஜா சர் அண்ணமலைச் செட்டியார், வள்ளல் அழகப்பர் போன்றோர் ஒப்புரவுக் குணத்தால் உயர்ந்து வாழ்ந்த சான்றோர்கள் ஆவர். பற்பல ஊர்களில் கல்வி நிறுவனங்களையும் இலவச மருத்துவ மனைகளையும் நிறுவியவர்கள் அனைவரும் ஒப்புரவுக் குணம் கொண்ட செல்வந்தர்களே ஆவர். சுமைதாங்கி திரைப்படத்தில் பி.பி. ஸ்ரீனிவாசின் இனிய குரலில் ஒலிக்கும் கண்ணதாசனின் கருத்துள்ள பாடல் ஒப்புரவின் பெருமையைப் பேசுகிறது.`மனிதன் என்பவன் தெய்வமாகலாம்வாரிவாரி வழங்கும்போது வள்ளலாகலாம்வாழைபோல தன்னைத் தந்து தியாகி ஆகலாம்உறுதியோடு மெழுகுபோல ஒளியை வீசலாம் ….ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகள் ஆகலாம்உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்கள் ஆகலாம்யாருக்கென்று அழுதபோதும் தலைவன் ஆகலாம்மனம் மனம் அது கோவிலாகலாம்…மனமிருந்தால் பறவைக் கூட்டில் மான்கள் வாழலாம்வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்துணிந்து விட்டால் தலையில் எந்தச் சுமையும் தாங்கலாம்குணம் குணம் அது கோவிலாகலாம்..’ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்லலாம். துப்புரவுப் பணிகள் புறத்தைத் தூய்மை செய்யும். ஒப்புரவுப் பணிகளோ அகத்தையே தூய்மை செய்து விடும். புறத்தில் தூய்மை இருந்தால் போதுமா? பிரதிபலன் கருதாத ஒப்புரவுப் பணிகளால்  அகத்திலும் தூய்மை தோன்ற வேண்டும் என்கிறது வள்ளுவம்.(குறள் உரைக்கும்.)திருப்பூர் கிருஷ்ணன்

The post ஊருக்கென்று வாழும் நெஞ்சம்… appeared first on Dinakaran.

Tags :
× RELATED வெற்றி தரும் வெற்றிலை மாலை வழிபாடு!